நாம் அமைப்பு சார்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் நடந்த சங்கம் 4 நிகழ்ச்சியில் பத்துநாட்கள் ஏகப்பட்டபேர் உரை ஆற்றிமுடித்தார்கள். திராவிடமா தமிழ்தேசியமா என்ற தலைப்பில் சுப.வீயும் பெ.மணியரசனும் பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டு நாமும் அங்கே போய்ச்சேர்ந்தோம். வெளியே சிறுதானிய உணவு வகைகள் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. பசி வயிற்றைக் கிள்ளியதால் ஒரு கரண்டி சிறுதானிய கலவை சாதத்தை 30 ரூபாய் கொடுத்து வாங்கி வயிற்றில் தள்ளிவிட்டு அரங்கின் வாசலில் நின்றபோது,“உள்ளே போங்கசார்.. இடம் இருக்கு” என்று யாரோ அன்பாக நம்மை அரங்குக்குள் தள்ளி விட்டார்கள். நம்மாழ்வாரின் சீடரான எங்கல்ஸ் ராஜா பேசிக்கொண்டிருந்தார். சமீபத்தில் நாம் கேட்டதில் மிக அருமையான உரை. வளர்ச்சி என்ற பெயரில் நாம் இழந்தவற்றைப் பற்றியெல்லாம் அந்த இளைஞர் எளிமையான மொழியில் விளக்கிக்கொண்டே போனார். “இவர் பேச்சைக் கேட்பதற்காகவே நான் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்’ என்று அருகில் இருந்த ஒருவர் சொன்ன போது நம்மால் நம்பாமல் இருக்கமுடியவில்லை. நாம் வெட்டி சண்டைக்காக வந்திருக்கிறோம். இவரோ விவசாயம் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருக்கிறார் என்ற குற்ற உணர்ச்சியுடன் நிமிர்ந்தபோது,‘50 லட்சரூபாய்க்கு சென்னையில் பிளாட் வாங்கறாங்களாம். அப்புறம் கடன் அடைக்க 50,000 ரூவா மாச சம்பளத்துக்கு யார்கிட்டயோ கைகட்டி வேலைக்குப் போறாங்களாம். இதே 50 லட்சத்தை விவசாயத்தில் போட்டால், வீட்டில் காலாட்டிகொண்டு ஓய்வு எடுக்கலாம். வேலைக்கே போக வேண்டாம்!” எங்கல்ஸ் ராஜா பேசிமுடித்ததில் ஓர் அர்த்தம் இருக்கிறது!
முதலில் சுப.வீரபாண்டியன் திராவிடம் என்ற கொள்கையை ஆதரித்து அரை மணி நேரம் பேசினார். “நாங்கள் யாரிடமும் மோதவில்லை. காதலில் ஒரு தலைக்காதல் என்பதுபோல் இது ஒரு தலை மோதல். தமிழ் வேண்டும்; தமிழ் உணர்ச்சி இந்த மண்ணை ஆளவேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை” என்று ஆரம்பித்தவர் திராவிடம் என்பது சொல் அல்ல அது ஒரு கோட்பாடு. அதற்கு அகராதியில் பொருள் தேடமுடியாது; வரலாற்றில் விடை தேடவேண்டும் என்று பேசிக்கொண்டே போனார். திராவிடம் என்ற சொல்லை பாவாணர் ஏற்றுக்கொண்டார்; அயோத்திதாசர் ஏற்றுக்கொண்டார்; திருவிக ஏற்றுக்கொண்டார்; மறைமலை அடிகள் ஏற்றுகொண்டார்; நீங்கள் ஏன் முரண்டு பிடிக்கிறீர்கள் என்ற ரீதியில் அமைந்திருந்தது அவரது பேச்சு. பார்ப்பனிய எதிர்ப்பை உள்ளடக்கிய தமிழர்களை திராவிடர்கள் என்று சொல்கிறோம். வேறொன்றும் இல்லை. மபொசி போன்றவர்கள் திராவிடத்தை எதிர்த்தபோது அவருக்குப் பின்னால் இருந்தவர் ராஜாஜி. திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தியபோது அதற்குப் பின்னால் இருந்து உதவியவர்கள் பார்ப்பனர்கள். நாம் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தபோது அதை மண்ணெண்ணெய் கொண்டு துடைத்தவர் மபொசி அவர்கள். திராவிட எதிர்ப்பு என்பது மறைமுகமாக பார்ப்பனிய ஆதரவில் முடிகிறது என்பதால் அதற்கு வழிகொடாதீர்கள் என்றும் பல தகவல்களைச் சொல்லி முடித்தார் அவர்.
பெ.மணியரசன் பேசவந்தபோது,“ தமிழ்த்தேசியம் என்றாலே நீ பார்ப்பனீயத்தை ஆதரிக்கிறாய் என்று சொல்லிவிடுகிறார்கள். கடவுளை மறுத்தால் நீ சைத்தானை ஆதரிக்கிறாய் என்று சொல்வதுபோல. இந்த நாடு பெரு முதலாளிய, இந்து பார்ப்பனிய கட்டமைப்பில் ஆனது என்று எங்கள் கட்சிகொள்கையில் நிர்ணயித்திருக்கிறோம். இதைத் திராவிடக் கட்சிகள் நிர்ணயிக்கத் தயாரா? தேர்தலில் நிற்காத திராவிட இயக்கம் கூட சொல்வதில்லை. நமக்கு முதன்மையான எதிர்ப்பு சக்தி பார்ப்பனிய சக்திகள்தான்” என்று சொல்லி அவரது பிராண்ட் தமிழ்த்தேசியத்துக்குத் தாவிச் சென்றார். பொதுவாக திராவிடத்தை ஆதரிப்பவர்கள் சொல்லக்கூடிய பார்ப்பன ஆதரவுக் குற்றச்சாட்டை எடுத்த எடுப்பிலேயே அவர் உடைத்துவிட்டதால் அதன் பின்னால் சுப.வீயின் வாதங்களை எல்லாம் மிக எளிதாக அவர் கடந்து சென்றதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த விவாதத்தின் போது மெல்ல அவர் பெரியாரை கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாக்கினார். “காந்தியம், மார்க்சியம் போன்றவை உலகளவில் சிந்தாந்தங்களாக வளர்ந்துள்ளன. ஆனால் பெரியாரியம் ஏன் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது ஒரு சித்தாந்தம் அல்ல. பெரியார் நிகழ்வுகளுக்கு ஏற்ப மாற்றி மாற்றி எதிர்வினை ஆற்றுபவர்தான் அவர் ஒரு சித்தாந்த வாதி அல்ல” என்று அவர் வைத்ததுதான் மிகக் கடுமையான விமர்சனம்.
“திராவிடம் என்கிறீர்களே? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது சுற்றிலும் உள்ள மாநிலங்களில் இருந்து கட்சிகள் ஒரு கண்டனத்தீர்மானம் கூட இயற்றவில்லையே? தானாடவில்லை என்றாலும்கூட தசை ஆடுமல்லவா? ஏன் ஆடவில்லை? ஏனெனில் திராவிடம் என்று எதுவும் இல்லை. அதுவொரு போலியான கோட்பாடு. தமிழன் என்பதுதான் உண்மையானது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட ஒரு பெயரை மறைத்துவிட்டீர்களே? திராவிடமும் பார்ப்பனியத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் என்பதுதான் எங்கள் கோபத்தின் காரணம்.” இதுதான் மணியரசனின் பேச்சின் சாரம். “தென்னிந்திய பார்ப்பனர்கள்தான் திராவிடர்கள். துரதிருஷ்டவசமாக தென்னாட்டில் இருக்கும் உள்நாட்டு மக்களும் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில்(1947) உள்ளது” என்று ஒரு விஷயத்தைப் படித்துக்காட்டியபோது அரங்கில் வந்திருந்த தமிழ்த் தேசியர்கள் மிகவும் ரசித்தார்கள்.
மீண்டும் சுபவீயும் மணியரசனும் மேடைக்கு ஏறி அருகருகில் அமர்ந்து ஆளுக்கு பத்துநிமிடம் பேசினார்கள். சுபவீ புத்திசாலித்தனமாக ஒரு கேள்வி கேட்டார்: தர்மபுரியில் நடந்ததே சாதிக்கலவரம் அதுதான் உங்கள் தமிழ்தேசியமா என்று. கறுப்புச்சட்டை போட்டுக்கொண்டு நிறைய பேர் வந்திருந்தார்கள். தங்கள் தரப்பு சோபிக்கவில்லையே என்று அவர்கள் வருத்தத்தில் இருந்தார்கள். எனவே சுபவீயின் இந்த கேள்விக்கு பெரிதாய் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரித்துப் பங்கேற்கும் எந்த உரை நிகழ்ச்சியும் வேறொரு பரிணாமத்தை அடைந்துவிடுகிறது. ரத்தமும் சதையுமான நேரடி விவாதங்களே விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.
ஆனால் மணியரசன் சுபவீயை திருப்பிக்கேட்டார்: நம்மிடம் பிரச்னை இருக்கிறது என்பதால் அடுத்தவனிடம் கொடுத்துவிடுவதா? தர்மபுரியில் பிரச்னை நடந்தபோது அதை கடுமையாகக் கண்டித்திருக்கிறோம்.
சிங்களர்கள் தமிழர்கள் மீது தாக்குவதற்கும் இதற்கு என்ன வித்தியாசம் என்று கண்டித்துப் பேசியிருக்கிறேன் என்று பேசிய மணியரசன் இப்படி திசை திருப்புவதுதான் திராவிடம் என்று சொல்லி முடித்தார். தீவிரமான தத்துவார்த்த மோதலின் போது பெ.ம.வும் சுபவீயும் மிகுந்த கண்ணியத்தை வெளிப்படுத்தியது பாராட்டத்தக்கது.
விவாதம் முடிவுக்கு வந்தபோது பார்வையாளர்கள் விடுவதாக இல்லை. போலித் தமிழ் தேசியம் ஒழிக என்று கருப்புச்சட்டை அணிந்த இளைஞர்கள் கோஷம்போட்டனர். திராவிடர் கழகத்தின் கவிஞர் கலிபூங்குன்றன் அமைதிப்படுத்தினார். திராவிடத்தை ஒரு பண்பாட்டு அடையாளமாகச் சொல்லி அதன் கூறுகளான கறுப்பு நிறம், மீசை, தாய்மாமன் உறவு போன்ற அடிப்படைகளை சுப.வீ. பேசியிருக்கலாம். அதை பெ.ம. எப்படி சமாளிக்கிறார் என்று பார்த்திருக்கலாம் என்றார் நிகழ்வுக்கு வந்த நண்பர் ஒருவர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த விவாதம் இப்போதைக்கு முடியப்போவதில்லை!
மார்ச், 2015.